பிளஸ் 2 வகுப்புகள் நிறைவு

சென்னை :பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 2ல் பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், வகுப்புகள் நிறைவடைந்தன. ஒரு வாரம் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக
பள்ளிகளில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வுகள், மார்ச்சில் நடக்கின்றன. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 2ல் துவங்க உள்ளது.
இதற்கான ஆயத்த பணிகள் முடிந்துள்ளன. தேர்வு மையங்களுக்கு, முதன்மை விடைத்தாள் அனுப்பப்பட்டு, அவற்றில் மாணவர்களின் விபரங்கள் அடங்கிய, முகப்புத்தாள் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.மேலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஹால் டிக்கெட் வழங்கும் பணிகளை, தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.

இந்த பணிகள், நேற்றுடன் முழுமையாக முடிந்துள்ளன. ஹால் டிக்கெட் வழங்கப்பட்ட, பல பள்ளி களில், நேற்றுடன் வகுப்புகள் முடிவுக்கு வந்தன. சிறப்பு வகுப்பு, திருப்புதல் தேர்வு போன்றவையும் முடிந்துள்ளன. இதையடுத்து, தேர்வுக்கு தயாராவதற்காக, ஒரு வாரம் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகள், வகுப்புகளை முடித்தாலும், வரும் திங்கட்கிழமை, மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்துள்ளன.அன்றைய நாளில், குழு புகைப்படம் எடுத்தல், தேர்வு எழுதுவதற்கான சிறப்பு ஆலோசனைகள் வழங்குதல், கூட்டு பிரார்த்தனை போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.