'நோ!' வங்கி ஏ.டி.எம்.களில்இனி ரூ.2,000 நோட்டு வராது

சென்னை, பிப். 22-- நாடு முழுவதும் உள்ள, ஏ.டி.எம்., இயந்திரங்களில், மார்ச், 1 முதல், 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்காது. 'ஏ.டி.எம்., இயந்திரங்களில், 2,000 ரூபாய் நோட்டுகளை நிரப்ப வேண்டாம்' என, வங்கி கிளைகளுக்கு, வங்கி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி
உள்ளது.
கடந்த, 2016, நவ., 8ல், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய, 2,000, 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. முதலில், 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த போது, அதற்கு சில்லரை கிடைக்க மிகுந்த சிரமம் ஏற்பட்டது. பின், 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

சமீப காலமாக, 2,000 ரூபாய் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து மறைந்து விட்டன. அரிதிலும் அரிதாகவே, ஏ.டி.எம்.,களில் கிடைப்பதாக, வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், 'ஏ.டி.எம்.,களில், 2,000 ரூபாய் நோட்டுகளை நிரப்ப வேண்டாம்' என, வங்கி கிளைகளுக்கு, அவற்றின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன் விபரம்:

ஏ.டி.எம்.,களில், 2,000 ரூபாய் நோட்டுகள் தான் அதிகம் கிடைக்கின்றன. அவற்றுக்கு சில்லரை கிடைக்காமல், வங்கி கிளைகளில் மாற்ற, வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.இது, அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. குறைந்த மதிப்பு உள்ள ரூபாய் நோட்டுகளே, வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதாக உள்ளன.இதனால், ஏ.டி.எம்., இயந்திரங்களில், 2,000 ரூபாய் நோட்டுகள் நிரப்புவதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்குப் பதில், 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் நிரப்பினால் போதும். இந்த உத்தரவு, மார்ச், 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகம் முதலிடம்
கடந்த, 2018ல், நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையில், குஜராத், தமிழகம் ஆகியவை முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்தன.

அதேசமயம், அந்தாண்டு, 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதலில், தமிழகம் முதலிடத்தை பிடித்திருந்தது. 2.51 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கின. அடுத்த படியாக, மேற்கு வங்கத்தில், 1.92 கோடி ரூபாய், கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.