நாளை விடைபெறுகிறது வட கிழக்கு பருவ மழை

சென்னை : மூன்று மாதங்களாக பெய்த, வட கிழக்கு பருவ மழை, நாளையுடன் விடைபெறுகிறது.


வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை என, இரண்டு பருவ மழை காலங்களில், தமிழகத்திற்கு மழை கிடைக்கிறது.பல ஆண்டுகளாக, பருவமழை காலத்தில் இயல்பான மழை பெய்யாமல், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இரண்டு பருவமழை காலங்களிலும், மழை கொட்டோ கொட்டென்று கொட்டியுள்ளது. பரவலாக பெய்ததுதென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பெய்யாமல், பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை, அக்., 16ல் துவங்கியது.

நவ., - டிச., - ஜன., என, மூன்று மாதங்களுக்கு மேலாக, இந்த மழை காலம் நீடித்த நிலையில், நாளையுடன் முழுமையாக விடைபெறும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை மறுநாள் முதல், பின் பனிக்காலம் தீவிரம் அடையும், அதை தொடர்ந்து, வெயில் காலம் துவங்கும். வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு, 109 சதவீதம் வரை பெய்துள்ளது. சென்னை, வேலுார் மற்றும் புதுச்சேரியில் மட்டும், மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.

மழை விடை பெறும் நிலையில், நேற்று முன்தினம், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் திடீர் மழை பெய்து, மக்களை மகிழ்வித்தது.பனி அதிகரிக்கும்நேற்று காலை நிலவரப்படி, பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, சீர்காழி, அரியலுார், கடலுார், தஞ்சாவூர், மயிலாப்பூர், பட்டுக்கோட்டை, சிவகங்கை, திருப்பத்துார் ஆகிய இடங்களில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது. 'இன்று வட மாவட்டங்களிலும், மற்ற பகுதிகளிலும் லேசான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் பனி அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.