நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தமிழகத்தில் சரிவு

சென்னை: கடந்த 2019ம் ஆண்டைக் காட்டிலம், 2020 ல் நடக்கும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 17 சதவீதம் சரிந்துள்ளது.


இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 1,17,502 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 17 சதவீதம் குறைவாகும். 2016க்கு பிறகு, தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது தான் குறைந்துள்ளது. தேசிய அளவில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர்கள் கூறுகையில், பல முறை தேர்வு எழுதும் மாணவர்களே அதிகளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட் ஆப் அதிகமாக பெறுவதும், ஆள்மாறாட்ட சம்பவங்களால், சில மாணவ மாணவிகள் அதிருப்தியில் இருப்பதாலும், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என்றனர்.

அதேநேரத்தில் மாணவர்கள் கூறுகையில், கடந்த 2019ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த 4,202 மாணவர்களில் 2,916 (70 சதவீதம்) பேர் பழைய மாணவர்கள். இதனால், 2019ல் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் சிலர் இந்த ஆண்டு இடைவெளி விட்டு, நன்கு படித்து பயிற்சி எடுத்து கொண்டு அடுத்த ஆண்டில் நீட் தேர்வு எழுதி கொள்ளலாம் என முடிவெடுத்திருக்கலாம் எனக்கூறினர்.