பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி சலுகை குறைவாகவே இருக்கும்!!

இந்தியப் பொருளாதாரம் மோசமாக இருப்பதாலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல வரிச் சலுகையினாலும் மத்திய அரசின் வரிவருவாய் வெகுவாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், வரும் பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி குறைப்பு பெரிய அளவில் இருக்காது என தெரிகிறது.
இந்தியப் பொருளாதார சூழல்மந்தமாக இருப்பதால் மறைமுக வரிகளான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ.50,000 ஆயிரம் கோடி எனும் அளவுக்குக் குறைவாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில் நேரடி வரி வருவாயும் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கார்ப்பரேட் வரி 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகவும் புதிய நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டதை அடுத்து நேரடி வரிகளான கார்ப்பரேட் வரி மற்றும் தனிநபர் வருமான வரி வருவாயும் குறைந்துள்ளது. குறைந்தபட்சமாகரூ.1.5 லட்சம் கோடி அளவுக்குகுறையும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார நடவடிக்கைகளையும் முதலீடுகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் குறைக்கப்பட்ட கார்ப்பரேட் வரியினால் எந்தப்பலனும் ஏற்படவில்லை. இந்நிலையில் அரசின் வரி வருவாயும் வெகுவாகப் பாதித்திருக்கிறது.
அரசு முன்னெடுத்துள்ள பங்கு விலக்கல் நடவடிக்கைகளும் எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை. இதனால் அரசு பல வகைகளிலும் நிதிப் பற்றாக்குறைக்கு ஆளாகியுள்ளது.
மொத்தமாக அரசின் வரி வருவாய் ரூ.2.5 லட்சம் கோடி முதல் ரூ.3 லட்சம் கோடி வரையில் குறையலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி குறைப்பு பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.