கரோனா வைரஸ் காரணமாக எவ்வாறு உயிரிழப்பு ஏற்படுகிறது?


கடந்த 2002 நவம்பர் முதல் 2003 ஜூலை வரை தெற்கு சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திப் பரவிய சார்ஸ் வைரஸ் தொற்று நோயால் 17 நாடுகளில் 8,098 பேர்
பாதிக்கப்பட்டனர். அதில் 774 பேர் பலியானதாக உலக சுகாதார மையம் தெரிவித்தது. சார்ஸ் வைரஸ் பாதிக்கப்பட்ட 10-ல் ஒருவர் உயிரிழந்தனர். இருப்பினும் 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு சார்ஸ் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த நிலையில், சார்ஸ் போன்று சீனாவில் பரவியதுடன் தற்போது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு காரணமாக சுமார் 65 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தற்போது வரை உலகம் முழுவதும் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 56 பேர் உயிரிழந்தனர். சீனாவின் வுஹான் கடை வீதியில் இருந்து இந்த புதிய வைரஸ் தொற்று நோய் பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

ஒருவருடைய மூச்சுக்குழாயில் முதல்முதலாக இந்த கரோனா வைரஸ் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் சாதாரணக் காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்ட தொற்று ஏற்பட்டு உடல்நலன் பாதிப்படைகிறது. பின்னர் வாயு உபாதை மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. நுரையீரல் செல்களில் உள்ள புரதத் தன்மையை பாதிக்கிறது. பின்னர் அங்கு வைரஸ் பரவி பாதிப்பை அதிகப்படுத்துகிறது.
இதுவே காற்றின் மூலம் இதர மனிதர்களுக்கும் பரவும் சூழலுக்கு கொண்டு செல்கிறது. அதுமட்டுமின்றி வயிற்றுப்போக்கு மூலமாகவும் பரவுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவருக்கு அதீத உடல் சோர்வை ஏற்படுத்துவதுடன், உடலின் வெப்பநிலையை 38 டிகிரி செல்சியஸ் அளவைக் கடந்து நீண்ட நாட்களுக்கு நீடிக்கிறது. இதுவே ஒருவருக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தி நிமோனியா காய்ச்சலாக மாறுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு ஒரு நாள் முதல் 14 நாள் வரையில் கரோனா தாக்கம் வேறுபடுகிறது. பெரும்பாலும் குறிப்பிட்ட அறிகுறிகளின் மூலம் 6 நாள்களுக்குள்ளாக கரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது.

சீனாவில் கரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே அதாவது கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி சுகாதார நிபுணர்கள் இதன் பாதிப்பு குறித்து எச்சரித்திருந்தனர். மேலும் கரோனா பாதிப்பு காரணமாக ஒரே வருடத்தில் 65 மில்லியன் மக்கள் வரை உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதார ஆராய்ச்சி மையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் மருத்துவர் எரிக் டோனர் தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
வௌவால்கள் மற்றும் பாம்புகளின் இறைச்சியை உணவாக உட்கொள்வதன் மூலம் அவற்றிடம் இருந்து இந்த கரோனா வைரஸ் நோய் தொற்றி பரவியிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் கடந்த 2017-ஆம் ஆண்டில் யுனான் மாகாணத்தில் 15 வயது இளைஞரிடம் நடத்தப்பட்ட சோதனையில் சார்ஸ் போன்ற வைரஸ் கிருமி வௌவால்களிடம் இருந்து பரவியுள்ளதை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், இந்த புதிய கரோனா வைரஸானது வுஹான் நகரிலுள்ள மிருகங்களைத் தொடுவது அல்லது உண்பதன் மூலம் பரவியிருக்கக்கூடும் என்று கூறுகின்றனர்.

கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த இதுவரை மருத்துவம் கண்டுபிடிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட ஒருவரை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவு அல்லது அடிக்கடி நோய் பாதிப்பு உள்ளவர்களை கரோனா வைரஸ் அதிகம் எளிதில் பாதிக்கிறது.
பிற தடுப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு:
 • நோய் தொற்றை தொடக்கத்திலேயே கண்டறிவது
 • கைகளை சுத்தமாக வைத்திருப்பது
 • தரைப் பகுதியை அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது
 • சுவாசம் மூலம் பாதிக்காமல் இருக்க முகமடி அணிவது
 • பொது கழிவறைகளை தவிர்ப்பது
 • ஒருவரின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வைத் துளிகள் படாமல் பாதுகாத்துக்கொள்வது
 • பாதிக்கப்பட்டவர் அல்லது மக்கள் கூட்டத்தை தவிர்த்திருப்பது
 • பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி அவர்கள் பயன்படுத்திய பொருள்களை உடனடியாக சுத்தப்படுத்துவது
 • தொற்று நோய் பாதிப்பு உள்ள சிறுவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது
 • எளிய சுகாதார நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிப்பது
 • பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமானநிலையங்களில் உரிய முறையில் பரிசோதிப்பது