சி.பி.எஸ்.இ., தேர்வில் மாற்றமா?

சென்னை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிப்., 15ல், பொதுத் தேர்வு துவங்குவதில் மாற்றமில்லை. அதற்கான பணிகளை, விரைந்து முடிக்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்புக்கு, பிப்., 15 முதல், மார்ச், 20 வரையிலும், பிளஸ் 2க்கு, பிப்., 15 முதல் மார்ச், 30 வரையிலும், பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டு, தயாராகுமாறு, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
இந்நிலையில், பல்வேறு காரணங்களால், சி.பி.எஸ்.இ., பொது தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'அறிவித்தபடி, பிப்., 15ல் பொதுத் தேர்வு துவங்கும்; அட்டவணையில் மாற்றம் இல்லை.'தேர்வுக்கான ஏற்பாடுகளை, பள்ளிகள் விரைந்து முடிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.