வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணியின் கீழ் கடந்த 23ம் தேதி முதல் வரும் 22ம் தேதி வரை அலுவலக பணி நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 வரை வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்கலாம்.இதற்காக வாக்காளர்கள் சேர்த்தலுக்கு படிவம் -6, பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் -7, வெளிநாட்டில் வசிப்போர் பெயர் சேர்க்க படிவம் -6ஏ, பெயர், வயது, பாலினம், உறவுமுறை ஆகிய பதிவுகளில் திருத்தம் செய்வதற்கு படிவம் -8 ஆகிய மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம்.

மேலும், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக வரும் 4ம் தேதியும், 5ம் தேதியும், 11, 12ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஓட்டுச்சாவடிகளில் பணியில் இருக்கும் ஓட்டுச்சாவடி நிர்ணய அலுவலரிடம் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 வரை உரிய படிவத்தில் கோரிக்கை மனுக்களை வாக்காளர்கள் கொடுத்துக் கொள்ளலாம்.மேலும், படிவம் 6ல் பெயர் சேர்த்தலுக்கான படிவத்தோடு வயதிற்கான ஆதாரமாக பிறப்பு சான்று அல்லது கல்லுாரி, பள்ளி மாற்றுச் சான்று, ஆதார் அட்டை, இருப்பிடத்திற்கு ஆதாரமாக ரேஷன் கார்டு நகல் அல்லது இருப்பிடத்தை குறிக்கும் முகவரி உள்ள ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம் நகல் இவைகளில் ஏதேனும் ஒரு ஆவணங்களோடு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.