ரயில் கட்டணம் திடீர் உயர்வு: நள்ளிரவு முதல் அமல்

புதுடில்லி: ரயில் கட்டணம், நேற்று திடீரென உயர்த்தப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல், இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
ரயில் கட்டண உயர்வு தொடர்பாக, ரயில்வே நிர்வாகம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:
குளிர்சாதன வசதி இல்லாத, சாதாரண ரயில்களில் பயணிப்பதற்கான கட்டணம், கி.மீ.,க்கு, 1 பைசா அதிகரிக்கப்பட்டு உள்ளது. மெயில் மற்றும் விரைவு ரயில்களில், குளிர்சாதன வசதி இல்லாத படுக்கை வசதியுடன் கூடிய வகுப்பில் பயணிப்பதற்கான கட்டணம், கி.மீ.,க்கு, 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியில் பயணிப்பதற்கான கட்டணம், கி.மீ.,க்கு, 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. சதாப்தி, ராஜதானி, துரோந்தோ உள்ளிட்ட பிரிமியம் ரயில்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும்.
புறநகர் ரயில்களுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல், முன்பதிவு கட்டணம், அதி விரைவு ரயில் கட்டணத்திலும் மாற்றம் இல்லை. ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டு களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.