8ம் வகுப்புக்கு பள்ளி நேரம் அதிகரிப்பு - DINAMALAR

சென்னை -'எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், பள்ளி நேரத்தை கூடுதலாக ஒரு மணி நேரம் நீடித்து, தினசரி தேர்வுகளை நடத்த வேண்டும்' என, பள்ளிக்கல்வி துறை
உத்தரவிட்டுள்ளது. இதனால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.'மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. முதல் கட்டமாக, ஐந்தாம் வகுப்பு தேர்வை மட்டும், நடப்பாண்டில் ரத்து செய்வதற்கான ஆலோசனை நடந்து வருகிறது.இந்நிலையில், எட்டாம் வகுப்புக்கு, பள்ளி நேரத்தில், கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி, அவர்களுக்கு மாலை நேரத்தில், தினசரி தேர்வு நடத்த வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நடுநிலை பள்ளிகளில், 'பள்ளி நேரம் முடிந்ததும், கூடுதலாக ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்' என, கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான, ஈரோட்டில், இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.அரசு பள்ளிகளில், மாலை உரிய நேரத்தில் பள்ளிகள் முடிந்தால் மட்டுமே, கிராமப்புற மாணவர்கள், இலவச பஸ் பாஸை பயன்படுத்தி, சூரியன் மறைவதற்குள் வீட்டுக்கு செல்ல முடியும்.

கூடுதல் நேரம் பள்ளிகளில் இருக்க வைத்து விட்டால், கிராமங்களுக்கு செல்ல, அவர்களுக்கு பஸ் வசதி இருக்காது. மாணவியர் தாமதமாக வீடு திரும்புவது, பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தும் என, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, கூடுதலாக, ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தும் உத்தரவை, உடனே வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அமைச்சர் மறுப்பு

ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும், மாணவ - மாணவியருக்கு, மாலை நேரத்தில், கூடுதலாக வகுப்புகள் நடத்தவில்லை. பள்ளி முடிந்ததும், எட்டாம் வகுப்பினருக்கு, கூடுதலாக வகுப்பு நடக்கிறது என்பது தவறான செய்தி. இது குறித்து, ஈரோடு மாவட்டத்தில் மட்டும், முதன்மை கல்வி அலுவலர், அதற்கான ஆர்வம் காட்டியுள்ளார். ஆனால், கூடுதல் வகுப்பில் பங்கேற்க, மாணவர்களின் விருப்பம் அறிந்து, செயல்படுத்த அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.