முறைகேடு புகார் 'குரூப் - 4' தேர்வு ரத்து?

சென்னை:'குரூப் - 4' தேர்வில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால், தேர்வை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு, ஆட்கள் தேர்வு செய்யப் படுகின்றனர்.இந்நிலையில், வி.ஏ.ஓ., என்ற கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், வரி தண்டலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு, 2019, செப்டம்பரில், குரூப் - 4 தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள், நவம்பரில் வெளியாகின. தேர்ச்சி பட்டியலில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள், முதல், 100 தரவரிசைக்குள் இடம் பெற்றனர். இது குறித்து, மற்ற தேர்வர்கள் தரப்பில் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் எழுப்பப்பட்டது.
இது தொடர்பான விசாரணை அறிக்கையை, டி.என்.பி.எஸ்.சி., தயார் செய்துள்ளது. இதுகுறித்து, தேர்வாணைய உறுப்பினர் கூட்டத்தில் விவாதித்து, முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. விசாரணை அறிக்கை ரகசியமாக வைக்கப் பட்டுள்ளது.'முறைகேடுகள் நடந்தது தெரியவந்தால், தேர்வை ரத்து செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், மீண்டும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து, அதற்கான ஏற்பாடுகள் செய்து தேர்வை நடத்துவது, அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். இது குறித்து, அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடந்து வருகிறது' என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.