காலியாக உள்ள 1,070 பேராசிரியர் பணியிடங்கள்

அரசு பொறியியல் கல்லூரிகளில் 1,070 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் கீழ் 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. அதில், 13 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், 19 உறுப்புக் கல்லூரிகள் என மொத்தம் 32 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதற்கிடையே அரசு பொறியியல் கல்லூரிகளில் 1,070 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
 
கல்வித் தரம் பாதிப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனால், மாண வர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், 133 ஆசிரியர் பணியிடங் களை தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் கடந்த வாரம் வெளியிட்டது. ஒட்டுமொத்தமாக 1,070 பணியிடங்கள் வரை காலியாக இருக்கும் நிலையில், வெறும் 133 இடங்களை மட்டும் நிரப்பும் அரசின் முயற்சி பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது:
 
பேராசிரியர் பற்றாக்குறையால் கல் லூரிகளில் வகுப்புகள் ஒத்திவைக்கப்படும் நிலை இருப்பதால் மாணவர்களுக்கு முழுமையான கல்வியை கற்றுதர முடிய வில்லை. இதனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2018-ம் ஆண்டு தேர்வுகளில் அரசு கல்லூரிகள் 70 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி விகிதம் பெற்றிருந்தன. ஆனால், 2019-ல் அது 60 சதவீதமாக குறைந்துவிட்டது. அதேபோல், அரசு கல்லூரியில் 2016-ம் ஆண்டு படித்த 11 மாணவர்களும், 2017-ல் 7 பேரும், 2018-ல் 6 பேரும் பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்றனர். ஆனால், 2019-ம் ஆண்டில் ஒரு மாணவர் மட்டுமே பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பிடித் துள்ளார். குறிப்பாக பல்கலைக்கழக தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் திருநெல்வேலி அரசு கல்லூரி நடப்பாண்டில் மிகவும் பின்தங்கிவிட்டது. இதற்கு கல்லூரியில் நிலவும் 40-க்கும் அதிகமான பேராசிரியர்கள் பற்றாக்குறையே முக்கிய காரணம்.
 நிரம்பாத இடங்கள்
ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லாததால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்புக்கு தேவையான திறன்களை பெற முடிவ தில்லை. வேலைவாய்ப்பு கேள்வியாவ தால் நடப்பு கல்வியாண்டில் அண்ணா பல்கலையில் 3,200-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பவில்லை. இதுகுறித்து கேள்வி எழுந்ததாலேயே, தற்காலிக பேராசிரியர்களை நியமிக்கும் முடிவுக்கு அண்ணா பல்கலை வந்துள்ளது. அதேநேரம், இதர அரசு கல்லூரிகளின் நிலை குறித்து எந்த அறிவிப்பையும் உயர்கல்வித் துறை வெளியிடவில்லை. தற்போதைய சூழலில், திறன்மிக்க பொறியாளர்களுக்கான தேவை அதிக ரித்து வருகிறது.
தற்காலிக ஆசிரியர்கள் மூலம் சிக்கலை ஓரளவு சமாளிக்கலாமே தவிர, தகுதியான பேராசிரியர்களால் மட்டுமே திறமையான மாணவர்களை உருவாக்க முடியும். எனவே, மாண வர்கள் நலன்கருதி உரிய விதிமுறை களை பின்பற்றி, ஆசிரியர் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
 
நிதிப் பற்றாக்குறை
இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “நிதி பற்றாக் குறை மற்றும் அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து காரணமாகவே அரசு பொறியியல் கல்லூரிகளில் தற்காலிக பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் விரைவில் முழுமையாக நிரப்பப்படும்என்றனர். இதற்கிடையே, அண்ணா பல்கலைக் கழகத்தில் ஏற்கெனவே 518 தற்காலிக ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக பணிபுரி கின்றனர். அவர்களுக்கு முறையான பணி வரன்முறைகள் இல்லாததால் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்படுகின்றன.
எனவே, அண்ணா பல்கலை வெளியிட் டுள்ள தற்காலிக ஆசிரியர் பணி நியமன அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் அருட்பெருஞ்ஜோதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையில், தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.