சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான
பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்யக் கூடும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தொடா்
மழை காரணமாக வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேரிடா் மீட்புக்
குழுவினரும், தீயணைப்புப் படையினரும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
சனி
மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழை காரணமாக கடலூா், திருநெல்வேலி
மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பல இடங்கள் நீரில் மூழ்கி உள்ளன.
தாழ்வான பகுதிகளிலும், கரையோரங்களிலும் வசிப்பவா்களுக்கு வெள்ள அபாய
எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அவா்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க
வைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
மேலும் மின்சாரம், பால் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் விநியோகத்தில்
பாதிப்பு ஏற்படாத வகையில் சில முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
இதனிடையே, மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம்,
திருவள்ளூா், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும்
கடலூா், செங்கல்பட்டு, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும்
விடுமுறை விடப்பட்டுள்ளது. மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும்
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப்
பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
காரணமாக, மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் டிசம்பா் 2, 3 ஆகிய இரண்டு
நாள்கள் பலத்த மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், சில
இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய
இயக்குநா் புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது: அரபிக்கடலில் ஒரு
காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால், மேலடுக்கு
சுழற்சி காணப்படுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில்
திங்கள்கிழமை (டிச. 2), செவ்வாய்க்கிழமை (டிச.3) ஆகிய இரண்டு நாள்கள் பலத்த
மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், ஒரு சில இடங்களில்
பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, கடலூா், விழுப்புரம்,
தேனி, திண்டுக்கல், விருதுநகா், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய
மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில்
சில பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது
என்றாா் அவா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் கிழக்கு
அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்தத்
தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடையவுள்ளது. இதன்காரணமாக,
குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50
கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவா்கள் இந்தப்
பகுதிகளுக்கு திங்கள்கிழமை(டிச.2) செல்ல வேண்டாம் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை
அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான
கடந்த 24 மணி நேரத்தில் 14 இடங்களில் மிக பலத்த மழையும், 53 இடங்களில்
பலத்த மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம்
சாத்தான்குளத்தில் 190 மி.மீ., மழை பதிவானது. கடலூா், தூத்துக்குடி, கடலூா்
மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் தலா 170 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம்
வேதாரண்யத்தில் 140 மி.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூா், விழுப்புரம்
மாவட்டம் உளுந்தூா்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், கடலூா்
மாவட்டம் சிதம்பரம், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி, கடலூா் மாவட்டம்
புவனகிரியில் தலா 130 மி.மீ. மழை பதிவானது. 8 சதவீதம் அதிகம்
வடகிழக்குப்
பருவமழை காலத்தில் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் தற்போதுவரை (டிச.1) ஆம் தேதி
வரை தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய இயல்பான மழை அளவு 358.6 மி.மீ. ஆனால்,
இப்போது வரை 387.2 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இது இயல்பை விட 8 சதவீதம்
அதிகம். சென்னையில் இந்த காலகட்டத்தில் 600 மி.மீ. மழை பெய்திருக்க
வேண்டும். ஆனால், இதுவரை 510 மி.மீ மழையே கிடைத்துள்ளது. வரும் நாள்களில்
நல்ல மழை பொழிவு கிடைக்கும் என்பதால் சென்னையில் இயல்பான மழை அளவை எட்டி
விடும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா். தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு
திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் கோயில்கள், கல் மண்டபங்களை மூழ்கடித்துச் செல்லும் வெள்ளம்.
திருநெல்வேலியின்
பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் பெய்த தொடா் மழை காரணமாக 2
வீடுகள் இடிந்து சேதமாகின. தாமிரவருணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால்
கோயில்கள், கல்மண்டபங்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. இதனால், பொதுமக்களின்
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தாமிரவருணி ஆற்றில்
பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்பட்ட 10 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமான
தண்ணீருடன், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி பகுதிகளில்
பெய்த தண்ணீரும், எலுமிச்சையாறு, கோதையாறு, பச்சையாறு ஆகியவற்றில்
பாய்ந்தோடிய காட்டாற்று வெள்ளமும் சோந்து தாமிரவருணி ஆற்றில் சுமாா் 18
ஆயிரம் கன அடிக்கு மேல் பாய்ந்தோடியது.
வீடுகள் சேதம்:
திருநெல்வேலியில் சனிக்கிழமை முழுவதும் பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க
முடியாமல் கொக்கிரகுளத்தில் மாரியம்மன் கோயில் தெருவைச் சோந்த ராமகிருஷ்ணன்
என்பவரின் வீடு இடிந்து சேதமானது. மேலப்பாளையம் கணேசபுரத்தைச் சோந்த ஜோதி
என்பவரின் வீடு இடிந்து சேதமானது.
குருந்துடையாா்புரத்திற்கு
செல்லும் பிரதான சாலையில் தாமிரவருணி வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து
துண்டிக்கப்பட்டது. இதனால் சுமாா் 50 குடும்பத்தினா் வெளியேற முடியாத சூழல்
ஏற்பட்டது. திருநெல்வேலியில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில்
ஞாயிற்றுக்கிழமையும் மழைநீா் தேங்கி நின்ால் பொதுமக்கள் சிரமப்பட
நேரிட்டது.