நாட்டிலேயே முதல் முறையாக, ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும், கணினி வாயிலாக தேர்தல் அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு!

நாட்டிலேயே முதல் முறையாக, ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும், கணினி வாயிலாக, தேர்தல் அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலரின் கீழ், ஒரு ஓட்டுச்சாவடிக்கு, ஏழு அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.
இதற்காக, தேசிய தகவல்மையம் உதவியுடன், மாநில தேர்தல் ஆணையம், புதிய, 'சாப்ட்வேர்' தயாரித்துள்ளது. கருவூலத் துறையில் இருந்து, ஊழியர்களின் விபர படிவம் பெறப்படுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர், எந்த ஒன்றியத்தை சேர்ந்தவர், அவரது சொந்த ஊர், ஓட்டுச்சாவடி விபரம், வாக்காளர் அடையாள அட்டை எண் விபரங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.அதை, கணினியில் பதிவேற்றம் செய்து, பணி
ஒதுக்கப்படுகிறது. சொந்த ஊர், குடியிருக்கும் பகுதிகளில் பணியாற்ற முடியாதது போல, 'சாப்ட்வேர்' தயாரிக்கப்பட்டுள்ளதால், அதன்படி உத்தரவு வழங்கப்படுகிறது.உரிய காரணங்கள் இன்றி, பணியை மறுக்கவோ,பரிசீலிக்கவோ இயலாது.இதில், மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கு, 3 கி.மீ. சுற்றளவில் பணி வழங்கப்படுகிறது. மலைக் கிராம ஓட்டுச்சாவடிகளுக்கு தகுதியானவர்களை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு, 'ஆன்லைன்' வழியாக, பணி ஒதுக்கீடு செய்வது, தமிழகத்தில் தான் முதன்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது என, மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.