விடுமுறையை ஈடுகட்ட அனைத்து சனிக்கிழமையும் வேலை நாட்களா? அதிகாரிகள் ஆலோசனை!!

தேர்தல் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை போன்ற காரணங்களால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விட்டதால் மாணவர்கள் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட பள்ளிகளில் காலதாமதமாக வந்த புத்தகங்களால் பாடம் நடத்தும் பணிகள் பாதிக்கப்பட்டது.
 காலாண்டுத் தேர்வுக்கு பிறகு மழை காரணமாக அனேக மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு  நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் பள்ளிகள் சீராக இயங்கத் தொடங்கின.
அவசரம் அவசரமாக அரையாண்டுத் தேர்வுக்கான பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி முடித்த பிறகு, அரையாண்டுத் தேர்வும் நடந்தது. இதையடுத்து டிசம்பர 21ம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
 
 இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தல் நடப்பதால் பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்நிலையில், இரண்டுகட்டமாக நடக்கும் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்க கால தாமதம் ஆகும் என்பதால், ஜனவரி 4ம் தேதிக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தனர்.
தற்போது வாக்கு எண்ணிக்கை நடத்தி  முடிக்க மேலும் கால தாமதம்  ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறையை நீட்டிக்க அரசு ஆலோசித்து வருகிறது. அப்படி விடுமுறை அறிவித்தால் 4 நாட்கள் மட்டுமே பள்ளிகள் நடக்கும்.  மீண்டும் 11, 12ம் தேதி சனி ஞாயிறு விடுமுறை வருகிறது.
பின்னர் 13ம் தேதி ஒரு நாள் பள்ளிகள் திறக்கப்பட்டால் 14ம் தேதி முதல் பொங்கல் விடுமுறை வருகிறது. 19ம் தேதி பொங்கல் விடுமுறை முடிந்து 20ம் தேதிதான் பள்ளிகள் திறக்கும் நிலை ஏற்படும். இப்படி தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வருகிறது. இதனால் வீடுகளில் முடங்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான பாடங்களை உரிய நேரத்தில் நடத்தி முடிக்க முடியாது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தவிர 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி இறுதி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருப்பதால், அதற்குள் பாடங்களை நடத்தி முடிக்க முடியாது என்று ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
இந்நிலையில், தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களை ஈடுகட்ட சனிக் கிழமைகளில் பள்ளிகளை நடத்தினால் தான் பாடங்களை உரிய காலத்தில் நடத்தி முடிக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். இதை மெய்ப்பிக்கும் வகையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் நேற்று அறிவித்துள்ளார். அதன்படி சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும்.
Tags # NEWS