வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., 50-வது ராக்கெட்

சென்னை: 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், பி.எஸ்.எல்.வி., -- சி 48 ராக்கெட் உதவியுடன், 10 செயற்கைக் கோள்களை, வெற்றிகரமாக விண்ணில் நிலை
நிறுத்தியது.

இஸ்ரோ நிறுவனம், நாட்டின் தகவல் தொடர்பு, பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., -- ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைக் கோள்களை, விண்ணில் செலுத்தி வருகிறது.

தற்போது, நாட்டின் எல்லை பாதுகாப்பு, விவசாயம், காடுகளை பாதுகாத்தல், பேரிடர் முன்னெச்சரிக்கை ஆகியவற்றுக்கு பயன்படுத்த, 'ரிசாட் - 2 பி.ஆர்., 1' என்ற அதிநவீன செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது.இதை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்டான, பி.எஸ்.எல்.வி., -- சி 48 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின், முதலாவது ஏவுதளத்தில் இருந்து, நேற்று பிற்பகல், 3:25 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. அந்த ராக்கெட்டில், வணிக ரீதியாக, அமெரிக்காவின் ஆறு; இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலா ஒன்று என, ஒன்பது செயற்கைக் கோள்களும் அனுப்பப்பட்டன. ராக்கெட் புறப்பட்ட, 16 நிமிடம், 33வது வினாடியில், ரிசாட் செயற்கைக் கோள், 576 கி.மீ., உயரம் உள்ள, புவி சுற்றுவட்ட பாதையில், வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளின், செயற்கைக் கோள்களும் தனித்தனியாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன.ரிசாட் செயற்கைக் கோள், ஐந்து ஆண்டுகள் விண்ணில் இருந்தபடி, நாட்டின் எல்லை உள்ளிட்ட பகுதிகளை, துல்லியமாக புகைப்படங்கள் எடுத்து, இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும்.இது தொடர்பாக, இஸ்ரோ தலைவர் கே.சிவன், விஞ்ஞானிகளிடம் பேசியதாவது:தற்போது விண்ணில் ஏவப்பட்ட, பி.எஸ்.எல்.வி.,- - சி 48 ராக்கெட், பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட். இது, வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்.

அதேபோல், இந்த ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட, 75-வது ராக்கெட். கடந்த, 26 ஆண்டுகளாக, பி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள், வெற்றிகரமாக விண்ணில் பாய உழைத்த அனைவருக்கும் நன்றி. முதலாவது, பி.எஸ்.எல்.வி., ராக்கெட், 850 கிலோ செயற்கைக் கோளை மட்டும் எடுத்துச் செல்லும் திறனுடையது. தற்போது, அதே வகை ராக்கெட், 1,900 கிலோ செயற்கைக் கோளை எடுத்துச் செல்லும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில், தேவைக்கேற்ப மாறுதல்களை செய்ய முடியும். பி.எஸ்.எல்.வி., வகையில், இதுவரை, வணிக ரீதியாக, 17 டன் உட்பட மொத்தம், 52.50 டன் எடையுடைய செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, 'பி.எஸ்.எல்.வி., -50' என்ற நுாலை, சிவன் வெளியிட, இஸ்ரோ விஞ்ஞானி சோமநாத் பெற்றார்.