பிளஸ் 2 பொதுத்தேர்வு பட்டியல் விடுபட்ட மாணவர்கள் சேர்ப்பு

சேலம்:பிளஸ் 2 பொதுத்தேர்வில், விடுபட்ட மாணவர்களின் பெயர் சேர்த்த பட்டியலை சரிபார்க்க, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச்சில் தொடங்கும். இதில் பங்கேற்கவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல், 'எமிஸ்' எனும் கல்வி மேலாண் தொகுப்பு இணையதளத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது. கடந்த மாதம், இப்பட்டியல் பள்ளிகளுக்கு அனுப்பி சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டது. அதில் விடுபட்டிருக்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, சேலம் மாவட்டத்தில், 1,870 மாணவ, மாணவியரின் பெயர் விடுபட்டிருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, விடுபட்ட மாணவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு, புது பட்டியல் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், விடுபட்ட மாணவர்களின் விபரம் இருப்பதை உறுதிப்படுத்த, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.