தொழிலாளர் குழந்தைகள் கல்வி உதவி பெறலாம்

சென்னை:தொழிலாளர் நல நிதி செலுத்துவோரின் குழந்தைகள், கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, தமிழக தொழிலாளர் நல வாரிய செயலர்
தெரிவித்துள்ளார்.

இது குறித்து, வாரிய செயலர் வெளியிட்டுள்ள அறிக்கை:தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித் தொகை, கல்வி ஊக்கத் தொகை, பாடநுால் உதவித் தொகை ஆகிய, பல்வேறு உதவி திட்டங்கள், தொழிலாளர் நலத்துறையால் அமல்படுத்தப்படுகின்றன. மாதம், 25 ஆயிரம் ரூபாய்க்குள் ஊதியம் பெறுவோரின் குழந்தைகள் உதவி பெறலாம்.

இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், ஆசிரியர் பயிற்சி, விவசாயம், உடற்பயிற்சி ஆகிய, பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு படிப்போருக்கு, 5,500 ரூபாய் முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப் படும். மேல்நிலை கல்வி, தொழிற்கல்விக்கு, 4,000 ரூபாய் உதவி வழங்கப்படுகிறது.ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், பொதுத் தேர்வில், முதல், 10 இடங்களைப் பெறுவோருக்கு, 10ம் வகுப்பிற்கு, 2,000 ரூபாய்; பிளஸ் 2வுக்கு, 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை, தொழிலாளர்கள், தங்கள் நிறுவனத்தின் வழியாக, டிசம்பருக்குள், 'செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், அஞ்சல் பெட்டி எண்: 718, தேனாம்பேட்டை, சென்னை -- 6' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.