பாரதிதாசன் பல்கலை ஆசிரியர் பணி நியமனத்தில், முறைகேடுகள் நடந்திருப்பதாக, பல்கலை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.சங்கத்தின் மாநில பொதுச் செயலர் பாலமுருகன் கூறியதாவது:
திருச்சி, பாரதிதாசன் பல்கலையில் காலியாக உள்ள, 54 ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் பணி, இந்தாண்டு ஜூலையில் நடந்தது. இதில், மத்திய அரசு, மார்ச்மாதம் வெளியிட்ட இடஒதுக்கீடு முறையே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.ஆனால், மாநில அரசின் பணி நியமன நடைமுறை உத்தரவு, காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணி நியமன உத்தரவுகள், மத்திய பல்கலைகளுக்கு மட்டுமே பொருந்தும்; மாநில பல்கலைகளுக்கு பொருந்தாது.இது குறித்து, உயர்கல்வித் துறை செயலர், அனைத்து பல்கலை பதிவாளருக்கும் தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளார் . ஆனால், பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர், தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு வருகிறார்.தமிழக கவர்னரும், அரசும், இவ்விவகாரத்தில் தலையிட்டு, பணி நியமன நடைமுறைகளில் முறைகேடுகளை களைந்து, நியாயமான முறையில் பணி நியமனம் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.