பள்ளி மாணவருக்கு, 'ஸ்பேஸ் சேலஞ்ச்'

திருப்பூர் : தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவருக்கு தேசிய அளவிலான செயற்கைகோள் வடிவமைப்பு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் என்ற, என்.டி.ஆர்.எப்., தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தேசிய அளவில் அறிவியல், பொறியியல் ஆராய்ச்சி முயற்சிகளை, 'என்.டி.ஆர்.எப்' தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தற்போது பள்ளி மாணவர்கள் மத்தியில், அறிவியல் ஆர்வத்தை துாண்டும் விதமாக இப்போட்டியை நடத்துகிறது.எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். தாங்கு சுமைஒரு குழுவில் அதிகபட்சம், ஐந்து மாணவ, மாணவியர் இருக்கலாம்.

இவர்கள், 3.8 செ.மீ., கன சதுரத்துக்குள் புதுமையான யோசனை மூலம் செயற்கைகோளின் தாங்கு சுமையை வடிவமைக்க வேண்டும். சிறந்த, 12 புதுமையான யோசனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அம்மாணவருக்கு செயற்கைகோள் வடிவமைப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். மேலும், முப்பரிமாண செயற்கைகோள் பெட்டி இலவசமாக வழங்கப்படும். தேர்வு செய்யப்படும், 12 செயற்கைக்கோள்கள் சென்னையில், 20 கி.மீ., உயரத்துக்கு ஹீலியம் பலுான் உதவியால் ஏவப்படும்.

பின் பத்திரமாக தரையிறக்கப்படும். மாணவர்கள் தங்கள் பெற்றோர், ஆசிரியருடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் www.ndrf.res.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை, வரும், 25ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். வெளியீடுஇதற்கான முடிவு, டிச., 15ம் தேதி இணையளத்திலே வெளியிடப்படும். தொடர்ந்து, ஜன., 2020ல் செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படும். மேலும் விவரங்களுக்கு 080222 64336 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.