பிள்ளைகள் படிப்பது எங்கே: ஆசிரியர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'

சென்னை: ஆசிரியர்களின் பிள்ளைகள், அரசு பள்ளிகளில் படித்தால், அதன் விபரங்களை தாக்கல் செய்யும்படி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக பள்ளி கல்வித்துறையில், நிர்வாக ரீதியாகவும், பாட திட்டம் மாற்றம், கற்றல், கற்பித்தல் மற்றும் தேர்வு முறைகளிலும், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, அனைத்து நிர்வாகங்களும், 'இ - கவர்னென்ஸ்' என்ற, மின் ஆளுமை திட்டத்திற்குள் இணைக்கப் படுகின்றன. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விபரங்கள் அனைத்தும், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு தளத்தில், பதிவு செய்யப்படுகின்றன. எந்த மாவட்டத்தில், எந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; அவர்களின் கல்வி தகுதி, பணி நாட்கள், சொத்து மதிப்பு போன்றவை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள், எந்த பள்ளிகளில் படிக்கின்றனர் என்ற விபரங்களை, எமிஸ் தளத்தில் பதிவு செய்ய, ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எமிஸ் தளத்தில், இதற்கான வசதி தரப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகள் படிக்கவில்லை என்றால், 'இல்லை' என, பதிவு செய்ய வேண்டும். அரசு பள்ளியில் படித்தால், எந்த பள்ளி, எந்த மாவட்டம், மாணவரின் வகுப்பு, அவரின் எமிஸ் எண் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். திருமணம் ஆகாத ஆசிரியர்களாக இருந்தால், அந்த விபரத்தையும், எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப் பட்டுள்ளது.