பேராசிரியர்கள் நியமனம்: கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை - யு.ஜி.சி., எச்சரிக்கை!

தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் நியமிக்கப்படாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்லுாரிகளுக்கு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்து உள்ளது.நாடு முழுவதும் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களை நியமிக்க, யு.ஜி.சி.,யின் சார்பில், விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த விதிகளை, கட்டாயம் பின்பற்ற வேண்டும். பின்பற்றாத கல்வி நிறுவனங்களுக்கு, மானியம் நிறுத்தப்படுவதுடன், அங்கீகாரமும் ரத்து செய்யப்படும்.இந்நிலையில், அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, யு.ஜி.சி., செயலர் ரஜ்னீஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு, தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், யு.ஜி.சி., வழிகாட்டு முறைகளை பின்பற்றி, ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்களில், தரமான கற்பித்தல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. அனைத்து நிறுவனங்களிலும், தரமான கற்பித்தலை வழங்க வேண்டிய தேவையுள்ளது.

இது குறித்து, கல்லுாரிகள் தரப்பில், தீவிர கவனம் செலுத்தி, பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். இந்த பணிகளின்போது, யு.ஜி.சி.,யின் விதிகளை சரியாக பின்பற்றி, தகுதி வாய்ந்தபேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.இந்த உத்தரவை மீறும், கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.