தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் ஆணையம் ஆலோசனை

மழையால், உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவது குறித்து, மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.


தமிழகத்தில், 2016 முதல், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், உள்ளாட்சி பகுதிகளில், சாலைகள், மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்வதில், இழுபறி நீடித்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை, இம்மாத இறுதிக்குள் வெளியிடுவதாக, உச்ச நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அதற்கு, குறைந்த அவகாசமே உள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், 24ல் வெளியாகவுள்ளன. தேர்தல் முடிவுக்கு பின், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வந்தது. தற்போது, வடகிழக்கு பருவமழை தீவிரம்அடைந்து வருகிறது. வரும் நாட்களில், கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை முன்னெச்சரிக்கை பணிகளில், மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், நேற்று அவசர ஆலோசனை நடந்தது.இதில், மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி, செயலர் எஸ்.பழனிசாமி, ஊரக மற்றும் நகர்ப்புற முதன்மை தேர்தல் அதிகாரிகள், சட்ட ஆலோசகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த, இந்த ஆலோசனையில், உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தை அணுகி, நிலைமையை எடுத்துக் கூறி, அவகாசம் பெறுவது குறித்து, மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்கவும், இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.