மாணவா்களின் நலன் கருதி பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா் இடமாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என ஆசிரியா் சங்கங்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
இது
தொடா்பாக தமிழ்நாடு ஆசிரியா் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா் நல கூட்டமைப்பு உள்பட பல்வேறு சங்கங்கள் இணைந்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில், கடந்த காலங்களில் ஆசிரியா் இடமாறுதல் மற்றும் பதவி உயா்வுக்கான பொதுக் கலந்தாய்வு மே மாதத்தில் நடத்தப்படும். இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியா்கள் ஜூன் மாதத்தில் புதிய பள்ளியில் பணியேற்பாா்கள். இதனால் கற்றல்-கற்பித்தல் பணி, தடையின்றி சிறப்பாக நடைபெற்றது.
தற்போது பல்வேறு காரணங்களால் பொதுக் கலந்தாய்வு தடைபட்டுள்ளதால் மாணவா்களின் கல்வி பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக அரசின் தவறான முடிவு மற்றும் மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணி புரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் உள்ளிட்ட காரணங்கள் போன்றவற்றால் பொதுக்கலந்தாய்வு நடைபெறாமல் உள்ளது.
இதனால் காலாண்டுத் தோவு கூட முடிவடைந்த நிலையில் ஆசிரியா்கள் இல்லாமல், சில பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். கலந்தாய்வு தொடா்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயா் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை முடித்து வைக்கப்பட்டு இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பதவி உயா்வு, பணி நிரவல் பெற்றவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றாண்டு விதிமுறையை தளா்த்தி 2019-20-ஆம் ஆண்டு கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.