மீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..!


வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனிக்க வைப்பது ஒரு தனி கலைதான்... கதை சொல்வது, நடித்துக் காண்பிப்பது என மாணவர்கள் விரும்பும் முறையை ஆசிரியர்கள் கையாள்வதைப் பார்த்திருப்போம். ஆனால், மதுரையில் உள்ள கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் மீம்ஸ் மூலமே பாடம் நடத்தி அசத்துகிறார்.
 
மதுரை அருகே கருமாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் பாண்டிக்குமாரின் அணுகுமுறை வித்தியாசமாக உள்ளது. இளைய தலைமுறைக்கு புரியும் வகையில் மீம்ஸ் என்ற நுட்பத்தை கையில் எடுத்திருப்பதாகக் கூறுகிறார்.
பேராசிரியர் பாண்டிக்குமார்
கணினி அறிவியல் துறையில் ஆபரேட்டிங் சிஸ்டம் என்ற இயங்கு தளம் குறித்த பாடம் மிக, மிக கடினமான பாடமாக அந்தத் துறை மாணவர்களால் அறியப்படுகிறது.  மூத்த மாணவர்களும், இந்தத் துறைக்கு வரும் இளைய மாணவர்களை ஆபரேட்டிங் சிஸ்டம் பாடம் பற்றி பயமுறுத்துவது வழக்கம் .
 
இந்நிலையில்தான் பேராசிரியர் பாண்டிக்குமார் மீம்ஸ் மூலம் கணினி அறிவியல் அறிவியல் பாடத்தை நடத்தத் தொடங்கி, அதற்காக பாடப் புத்தகத்தையே உருவாக்கியுள்ளார். மீம்ஸ் மூலம் கணினி அறிவியலைப் படிப்பதால், பாடங்கள் மிக மிக எளிதாகப் புரிவதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
 
மீம்ஸ் மூலம் ஆபரேட்டிங் சிஸ்டம் பாடத்தை கற்பிக்கும் முறையை அறிமுகம் செய்யும் கணினி அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் ஜூலியட் சாந்தி தயக்கத்துடனேயே அனுமதி அளித்திருக்கிறார். இதற்கு கிடைத்த வரவேற்பால், தற்போது மற்ற பாடங்களுக்கும் இந்த முறையை அறிமுகப்படுத்தலாமா என கல்லூரி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.