அடிக்கடி வாட்ஸ் ஆப் உத்தரவுகள்; அலறி ஓடும் ஆசிரியர்கள்

ஆசிரியர்களுக்கு தினம் ஒரு 'வாட்ஸ் ஆப்' உத்தரவுகளை பிறப்பித்து, அவர்களை அவதிக்குள்ளாக்குவதால், கற்பிக்கும் பணியில் தொய்வு 

ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் கல்வித்துறை கல்வியில் புதிய கல்வி கொள்கை கொண்டு வரும் நோக்கத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வருகையை ஆன்-லைன் மூலம் பதிவேற்றம், சத்துணவு உட்கொள்ளும் மாணவர்களின் பதிவேற்றம் மற்றும் பல விபரங்களை தினமும் 'எமிஸ்'சில் அப்டேட் செய்ய வேண்டும்.இது தவிர, 54 வகையான ஆவணங்களை பராமரிப்பு செய்ய வேண்டும். தற்போது ஆசிரியர்களிடம் தினமும் 'வாட்ஸ் ஆப்' மூலம் பல தகவல்கள் கேட்கப்படுகிறது.ஒரு நாளைக்கு ஏகப்பட்ட தகவல்கள் கேட்டு, டி.இ.ஓ., ஏ.இ.ஓ., அலுவலகம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் என வருவதால் ஆசிரியர்கள் யாருக்கு எந்த தகவல்களை அனுப்புவது, அவற்றை எப்படி தயாரிப்பது என குழப்ப நிலையில் உள்ளனர்.இயக்குநர் அலுவலகத்தில் வரும் கடிதங்கள் முன்பு, டி.இ.ஓ., அலுவலகத்திற்கு வரும். பின்பு, அவை ஏ.இ.ஓ., அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, பின்னர் ஆசிரியர்களிடம் தகவல்கள் பெறப்படும்.ஆனால், தற்போது, இயக்குநர் அலுவலகத்தில் வரும் கடிதங்களை 'வாட்ஸ் அப்' மூலம் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி விடுகின்றனர். டி.இ.ஓ., மற்றும் ஏ.இ.ஓ., அலுவலகம் தற்போது 'மெசஞ்சர்' பணியை தான் செய்கின்றது.ஆசிரியர்களுக்கு தேவையான தகவல்கள் பற்றி விரிவாக எடுத்து கூறவது இல்லை. இதனால், ஆசிரியர்கள் எந்தநேரமும் அலைபேசியை பார்த்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது. இதனால், மாணவர்களின் கற்பித்தல் பணி பாதிப்பு அடைகிறது.தெளிவான சிந்தனையோடு பாடம் நடத்த அவர்களால் முடியவில்லை. 
எந்தநேரமும் அதிகாரிகள் வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ள உத்தரவுகளுக்கு தகவல் சேகரிப்பது, எப்படி தயார் செய்வது என்ற சிந்தனையில் தான் இருக்க வேண்டியுள்ளது. தற்போது கல்விதுறை 'வாட்ஸ் ஆப்' மூலம் தான் நடந்து வருகிறது. அனைத்திலும், நவீன வசதிகள், புதிய கல்வி கொள்கை என இருந்தாலும், மாணவர்களுக்கு கற்பிக்க நேரம் கிடைக்காத நிலையில் உள்ளோம் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

Source: Dinamalar