7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

சென்னை: 'வடகிழக்கு பருவமழை, ஏழு மாவட்டங்களில், இன்று(அக்.,19) கனமழையாக கொட்டும்; மற்ற இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.







வடகிழக்கு பருவமழை, அக்., 16ல் துவங்கியது. அன்று முதல் வங்க கடலில், வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சியால், வட மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை கொட்டியது. இன்று, ஏழு மாவட்டங்களில், கன மழை கொட்டும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி: அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.




சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும். கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை கொட்டும். வரும், 21, 22ம் தேதிகளில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், அனேக இடங்களில் மழை பெய்யும். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அக்டோபர், 1 முதல், இதுவரை சராசரியாக, 9 செ.மீ., மழை பெய்ய வேண்டும்; 8 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.