2ம் பருவ பாட புத்தகம் இன்றே வழங்க உத்தரவு

சென்னை : பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில், புத்தகங்களை இன்றே வழங்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.


தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வுகள், செப்., 23ல் முடிந்தன. இதையடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது. ஒன்பது நாட்கள் விடுமுறை நேற்று முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப் படுகின்றன. இதையடுத்து, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:முதல் பருவ தேர்வுகள் முடிந்து விட்ட நிலையில், அந்த புத்தகங்களை மாணவர்களிடம் பெற்று, புத்தக வங்கி ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில், மாணவர்களுக்கு இன்றே புத்தகங்களை வழங்க வேண்டும். இரண்டாம் பருவத்துக்கான வகுப்புகளை தாமதமின்றி துவங்க வேண்டும். இது குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியரும், உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, தனியார் பள்ளிகளுக்கு, இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்குவதில், தமிழ்நாடு பாடநுால் கழகம் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஆன்லைனில் பதிவு செய்தும், சில வகுப்புகளுக்கு இன்னும் புத்தகங்கள் தரப்படவில்லை என, பள்ளி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.