11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை : தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.






சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும். தென்தமிழகம், வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.



கனமழையை பொருத்தவரை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மணப்பாறை மற்றும் அதுன் சுற்றுவட்டாரங்கள் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனர்களுக்கான எச்சரிக்கையை பொருத்தவரை 28,29,30,31 ஆகிய நாட்களுக்கு மன்னார் வளைகுடா, தென் தமிழக கடல் பகுதி, தெற்கு கேரளா, குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.




தமிழகத்தில் மழை: தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் ஆவடி, அம்பத்தூர், காஞ்சிபுரத்தில் திருப்போரூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.