வாக்காளர் பட்டியலில் சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் மாநில தேர்தல் ஆணையர் தகவல்

தேனி:''உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்ய மேலும் பத்து நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது, ''என, மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்தார்.


உள்ளாட்சி தேர்தலையொட்டி தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கலெக்டர் பல்லவி பல்தேவ், அதிகாரிகள் பங்கேற்றனர்.மாநில தேர்தல் ஆணையர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இணைய வழியில் (tnsec.nic.in) சரிபார்க்கலாம். வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுச்சாவடி விபரம் தெரிந்து கொள்ளலாம்.

எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதற்காக புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கத்திற்காக கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா, ஒன்றியங்களில் இருப்பில் உள்ள ஓட்டுப்பெட்டிகள் சரியாக உள்ளதா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார். தொடர்ந்து
ஆண்டிபட்டி பேரூராட்சியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பொருட்கள் குறித்து ஆய்வு செய்தார்.