10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு

சென்னை,:பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு எழுதும் நேரம், மூன்று மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2
வரையிலும், புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, 2018ல், புதிய பாடத்திட்டம் அறிமுகமானது. மற்ற வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்திற்கான புத்தகங்களும், பள்ளிகளுக்கு தாமதமாகவே வழங்கப்பட்டுள்ளன. அதனால், விரைவாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள், கூடுதல் நேரம் எடுத்தும், மாலையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தியும், பாடங்களை முடித்து வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள் பொது தேர்வு எழுதும் நேரத்தை, அரை மணி நேரம் அதிகரித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையான பொது தேர்வுகளுக்கு, தற்போது, இரண்டரை மணி நேரமாக, தேர்வு எழுதும் நேரம் நடைமுறையில் உள்ளது. அதை மாற்றி, நடப்பு கல்வி ஆண்டில், மூன்று மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு, பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய பாடத்திட்டத்தில், புத்தகத்தில் உள்ள அம்சங்களை புரிந்து பாடம் நடத்த, ஆசிரியர்களே சிரமப்படுகின்றனர். இந்நிலையில், மாணவர்களால் சரளமாக படித்து, தேர்வை வேகமாக எழுத முடியாது என, பல்வேறு தரப்பில் இருந்தும், கல்வி துறைக்கு கோரிக்கை வந்தது. இதை தொடர்ந்து, தேர்வு நேரத்தை அதிகரிக்க, பள்ளி கல்வித்துறை முன்வந்துள்ளது.