அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு தடை

சென்னைஅரசு உதவி பெறும் பள்ளிகளின் காலியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வி துறை தடை விதித்துள்ளது. சிறுபான்மை பள்ளிகளுக்கும்
கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் பணியாளர்கள் நியமனத்தால் அரசுக்கு கூடுதல் நிதி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக அரசின் நிதி துறையில் இருந்து பள்ளிகல்வி துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.மேலும் நிதியாண்டு வரவு செலவு கணக்கு குறித்த தணிக்கையிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்கள் கூடுதலாக இருப்பதால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுவது சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. நிதி இழப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.இதன் அடிப்படையில் தமிழக பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் புதிய அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளார். அரசாணையில் கூறியிருப்பதாவது:அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கும் நடவடிக்கைக்கு அனுமதி இல்லை. காலி பணியிடங்கள் இருந்தால் அந்த பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை கணக்கிட்டு தேவைப்படும் ஆசிரியர்களை பிற அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து இடம் மாற்றம் செய்து கொள்ளலாம்.இது கல்வி மாவட்டம் மாவட்டம் பின் மாநில வாரியான மாற்றம் என விதிப்படி பின்பற்ற வேண்டும். இதற்குரிய விதிகளையும் பின்பற்ற வேண்டும். மாநிலம் முழுவதும் உபரி ஆசிரியர்கள் அதிகம் உள்ளதால் அவர்களை பணி நிரவல் என்ற அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் காலியிடங்களில் நியமித்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.