வினாத்தாள்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை: தேர்வுத்துறை இயக்குநர் எச்சரிக்கை

தேர்வுகளின் வினாத்தாள்களை முன்கூட்டியே வெளியிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அரசு பொதுத்தேர்வு எழுதக்கூடிய  பத்தாம் வகுப்பு,  பிளஸ் 1,  பிளஸ் 2  வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கடந்த 12-ஆம் தேதி முதல் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வுகள் வரும் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், ஷேர் சாட் எனப்படும் செல்லிடப்பேசி செயலியில் பிளஸ் 1 வகுப்புகளுக்கான வினாத்தாள்கள், தேர்வுக்கு முன்னதாகவே வெளியானதாக தகவல் பரவியது.
பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான வணிகவியல் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், இந்த வினாத்தாள் கடந்த ஞாயிற்றுக்கிழமையே இந்த செயலியில் பதிவிடப்பட்டதாகவும், அதேபோல செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கணினி பயன்பாட்டியல் தேர்வுக்கான வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாகவும் தகவல் பரவியது. குறிப்பாக ஷேர் சாட் செயலியில்  உள்ள கல்வி மற்றும் தொழில்நுட்பம் என்ற பகுதியில் தேர்வு வினாத்தாள்கள் உள்ளீடு செய்யப்பட்டிருந்தது.
அமைச்சர் விளக்கம்:  இதற்கிடையே காலாண்டுத் தேர்வு வினாத்தாள் வெளியாகவில்லை என்றும், முந்தைய நாள்களில் நடைபெற்ற தேர்வுகளின் வினாத்தாள்களே மறுநாள் செயலியில் வெளிவந்துள்ளன என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 இந்தநிலையில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷா ராணி இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:   இனி நடைபெறவுள்ள தேர்வுகளை எந்தவித புகாருக்கும் இடமின்றி நடத்தி முடிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வினாத்தாள்களை அச்சிட்டு...: மேலும், இதுசார்ந்த புகார்கள் ஏதும் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்படும்.  பொதுத் தேர்வுகளை போல், இனி வரும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கும் வினாத்தாள்களை அச்சிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.  இதுவரையில், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் சிடி மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.