மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறது!

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பைக் குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான புதிய விதிமுறைகளையும் அது அடுத்த நிதியாண்டு முதல் அமல்படுத்த உள்ளது.
இந்தப் புதிய முடிவின்படி, 33 ஆண்டுகள் பணிக்காலம் முடித்தவர்களுக்கு அல்லது 60 வயதை அடைந்தவர்களுக்கு ஓய்வளிக்கப்படும். இது ஏற்கனவே 7ஆவது ஊதியக் கமிஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முடிவு பாதுகாப்புத் துறையில் பணிபுரிபவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. புதிய முடிவின்படி, 22 வயதில் பணியில் சேரும் அவர்களுக்கு 55 வயதிலேயே ஓய்வு கொடுக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், இந்தப் புதிய ஓய்வு வயதுத் திட்டத்தின்படி ஏராளமான வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.
 
இது தொடர்பான பணிகளை மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளனர். புதிய முடிவின்படி ஓய்வு பெறப்போகும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் முதற்கட்டப் பெயர்ப் பட்டியலும் தயாராகி வருகிறது.
தற்போது, ஓய்வு பெறும் வயது ஒவ்வொரு மா நிலத்திலும் வேறுவேறாக உள்ளது.
தமிழகம், தெலுங்கானா, கோவா, அருணாச்சலப் பிரதேசம், மஹாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், மிஸோரம், மணிப்பூர், பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ஒடிஷா ஆகிய மா நிலங்களில் 58 ஆகவும், ஜார்க்கண்ட் மற்றும் கேரளாவில் 56 ஆகவும் ஓய்வு வயது உள்ளது.
ஆந்திரா, திரிபுரா, கர்நாடகா, அஸ்ஸாம், பிஹார், மேகாலயா, மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், நாகலாந்து, குஜராத், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மா நிலங்களில் ஓய்வு வயது 60 ஆக உள்ளது.
அதே நேரத்தில், மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவ ஆசிரியர்களுக்கான ஓய்வு வயது 65 ஆகவும், மருத்துவர்களுக்கான ஓய்வு வயது 62 ஆகவும், மற்ற அனைவருக்குமான ஓய்வு வயது 60 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.