'நீட்' பயிற்சி: இலவச வகுப்புகள் துவக்கம்

சென்னை, :பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரசின் இலவச, 'நீட்' பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கின. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும், பி.டி.எஸ்.,
படிப்புகளில் சேர்வதற்கு, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே, விரும்பிய கல்லுாரிகளில், மருத்துவ இடம் கிடைக்கும். இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, நீட் மற்றும், ஜே.இ.இ., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், அரசின் சார்பில் நடத்தப் படுகின்றன.

இந்த ஆண்டு, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்துடன், தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில், தமிழகம் முழுவதும், 413 இடங்களில், நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், நேற்று துவங்கின. சென்னையில், 10க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சியில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், பயிற்சி பெற்ற முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.