சொத்து கணக்கு தாக்கல் ஆசிரியர்களுக்கு உத்தரவு

சென்னை:'அரசு பள்ளி ஆசிரியர்கள், தங்கள் சொத்து கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என்று, பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.


பள்ளி கல்வி துறை இயக்குனர், கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, நேற்று அனுப்பிய சுற்றறிக்கை:அரசு மற்றும் அரசு உதவி பெறும், 3,688 உயர்நிலை பள்ளிகளின், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், 41 ஆயிரத்து, 805 பேர்; 4,040 மேல்நிலை பள்ளிகளின், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், 1.22 லட்சம் பேரின் விபரங்கள், 'ஆதார்' அடிப்படையில், 'பயோமெட்ரிக்' கருவியில் இணைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியை அன்னாள் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி களின், ஆசிரியர் மற்றும் பணியாளர் விபரங்களும், பயோமெட்ரிக்கில் இணைக்கப்பட உள்ளன.

பதவி உயர்வின் போது, இந்த விபரங்கள் கணக்கில் எடுக்கப்படும்.பள்ளி கல்வி துறையின், நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளிகளின் ஆசிரியர்கள், பணியாளர்களின், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விபரங்கள், அவர்களின் பணி பதிவேட்டில் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

இதில், ஏதேனும் முரண்பாடு நிகழ்ந்திருக்கும் பட்சத்தில், ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை அறிக்கைப்படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது, துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த அறிவுரைகளை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.