Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, September 7, 2019

8 லட்சம் ரூபாயில் கட்டடப் பணி, வேன் வசதி; வியக்க வைக்கும் சேலம் அரசுப் பள்ளி ஆசிரியர்!


முதல் நாள் நள்ளிரவிலிருந்து வரிசையில் நின்று, பிள்ளையைத் தனியார் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்களை நீங்கள் பார்த்திருக்க முடியும், அல்லது நீங்களாகவே கூட இருக்கலாம். கல்வியே நல்லதோர் எதிர்காலத்தை வழங்கும் என நினைக்கும் முயற்சியைப் பாராட்டலாம். ஆனால், புத்தகங்கள், கணினி, காலணிகள் உள்ளிட்ட பல பொருள்களை இலவசமாக அளிக்கும் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. இதைச் சரி செய்யப் பலவித யோசனைகளைக் கல்வியாளர்கள் பலர் அளித்துவந்தாலும் முன்னேற்றம் ஏதுமில்லை. இதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டியவர்கள் எனப் பட்டியல் தயாரித்தால், ஆசிரியர்களின் பெயர் முன்னிலையில் இருக்கும். அந்தப் பொறுப்பை உணர்ந்த பல ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கப் பல முயற்சிகளை எடுத்துவருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் சேலம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் சுடலை கண்.
 
சேலத்திலிருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் உள்ளது தும்பாதூளிப்பட்டி கிராமம். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் சுடலை கண். இந்தப் பள்ளியிலும் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. அதை இவரின் முயற்சியால் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளார். எப்படி இது சாத்தியமானது என அவரிடம் கேட்டேன்.
``நான் தூத்துக்குடி மாவட்டத்துக்காரன். 2009-ம் ஆண்டில் இந்தப் பள்ளியில் ஆசிரியராக வேலையில் சேர்ந்தேன். அரசு பல சலுகைகள் அளித்தாலும், அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்வது குறைந்துகொண்டே போகும் நிலை, எங்கள் பள்ளியிலும் இருந்தது. ஆனால், இந்தப் பகுதியிலுள்ள தனியார் கான்வென்ட்டில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பார்கள். கடந்த ஆண்டு தொடக்கத்தில் எங்கள் பள்ளியில் 25 மாணவர்கள்தான் இருந்தார்கள்.
ஒருநாள், வகுப்பில் மாணவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் `சார், பிரைவேட் ஸ்கூல் பசங்க எல்லாம் ஜாலியா வேன்ல போறாங்க சார்... நாங்க ரொம்ப தூரம் நடந்து வாறோம்" என்று வருத்தமாகச் சொன்னார்கள். அவர்கள் சொன்னது உண்மைதான். இது மலைப்பகுதி என்பதால் போக்குவரத்து வசதி அதிகம் இல்லை. அதனால், இரண்டு மூன்று கிலோமீட்டர் நடந்துதான் மாணவர்கள் வந்தார்கள். பிறகு, வேனில் சென்று படிப்பதை சில பெற்றோர் கெளரவமாக நினைத்தனர். இதற்கெல்லாம் ஒரு தீர்வாக ஆம்னி வேன் ஒன்றை ஏற்பாடு செய்தோம்.
 
ஆம்னிக்கு மாதம் ஒன்றுக்கு 4,000 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. அதை என் செலவாக ஏற்றுக்கொண்டேன். என்னுடைய பைக்கில் மாணவர்களோடு சேர்ந்து பல வீடுகளுக்குச் சென்று பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்க்கக் கேட்டோம். இதனால், சென்ற ஆண்டிலேயே மாணவர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்தது. இது எங்களுக்கு உற்சாகம் அளித்தது. இதுபோல வேறுசில முயற்சிகளை எடுக்கத் திட்டமிட்டோம்.
 
என் சொந்த ஊரிலிருந்து ஒரு நண்பர் என்னைப் பார்க்க பள்ளிக்கு வந்தார். அப்போது பள்ளியின் கூரையில் ஓடுகள் உடைந்து கிடைந்ததைப் பார்த்து, `இதெல்லாம் சரி செய்யலாமே?" என்றார். அப்படிச் சொன்னதோடு தன் பங்களிப்பாக, 10,000 ரூபாய் தருவாகவும் கூறினார். இப்படி ஒரு வழி இருப்பதை அதற்கு முன் யோசித்தது இல்லை. எனவே, மற்றவர்களிடம் உதவி கேட்டேன். குறிப்பாக, பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களில் தற்போது வெளிநாடுகளில் வேலையில் இருக்கிறார்கள். அவர்களை தொடர்புகொண்டபோது, உடனடியாக உதவினார்கள். எல்லோரின் உதவியைக் கொண்டும் பள்ளியின் ஒவ்வொரு தேவையையும் சரி செய்ய ஆரம்பித்தோம்.
பள்ளியின் காம்பவுண்ட் சுவரை 3,00,000 ரூபாய் செலவழித்துச் சீர் செய்தோம். பிறகு வகுப்பறை கட்டடங்கள், கழிப்பறை என மொத்தம் 8,00,000 ரூபாய்க்குச் செலவில் பள்ளியின் தோற்றத்தையே புதுப்பொலிவாக மாற்றினோம். இந்த மாற்றங்கள் ஊருக்குள் நல்ல விதமான பேச்சை உருவாக்கியது. அதன் விளைவாக, இந்த ஆண்டில் 67 ஆக, மாணவர் எண்ணிக்கை அதிகரித்தது. அருகில் இருந்த கான்வென்ட்டிலிருந்து 18 மாணவர்கள் எங்கள் பள்ளியில் வந்து சேர்ந்தார்கள். இதனால், ஆம்னியில் இடம் போதவில்லை என்பதால், பெரிய வேன் ஏற்பாடு செய்தோம். அதற்காக, மாதம் 8,000 ரூபாய் வாடகை கேட்டனர். பெற்றோர்களில் சிலர் உதவ முன்வந்தார்கள். அதன்படி அவர்கள் சார்பில் மாதம் 4,000 ரூபாயும், வழக்கம்போல, என் பங்களிப்பாக 4,000 ரூபாயுமாக வழங்கி வேன் செலவுகளைச் சமாளிக்கிறோம். தலைமை ஆசிரியரின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது" எனப் புன்னகையுடன் சொல்கிறார் ஆசிரியர் சுடலை கண்.
Government school
பள்ளிக் கட்டடங்களுக்குப் புதுப் பொலிவு தந்ததோடு பாடங்களையும் புதிய விதத்தில் தருகிறார். ``ஆமாம். நான் கவிதைகள், பாடல்கள் எழுதுவேன். அதை ஏன் பாடங்களைக் கற்பிக்கும் விதமாக மாற்றக் கூடாது என்று யோசித்தேன். விளையாட்டாக, இரண்டாம் வகுப்புப் பாடம் ஒன்றை பாடலாக்கி மாணவர்களிடம் பாடிக்காட்டினேன். அடுத்த நாள், ஓய்வு நேரத்தில் மாணவர்கள் தாமாகவே பாடிக்கொண்டிருந்தனர். சினிமா பாடல்களுக்குப் பதில் `பாட' பாடல்களைப் பாட வைக்கலாமே என்று பல பாடங்களைப் பாடல்களாக மாற்றி விட்டேன். காய்கறிகளைப் பற்றிய பாடத்தை
தக் தக் தக்காளி
பப் பப்பாளி...
என்று ஆரம்பித்து, ஒவ்வொரு காயைப் பற்றியும் பாடல் வரிகள் செல்லும். இதனால், பாடல்களை எளிதாக நினைவில் வைத்திருக்க முடியும். இந்தப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டும் என்பதே எங்கள் அடுத்து இலக்கு" என்கிறார் சுடலை கண்.
பள்ளியில், மாணவர்களுக்கான சிறப்பு நாற்காலிகள், சுவர்களில் குழந்தைகளை ஈர்க்கும் ஓவியங்கள் எனச் சிறப்பான பள்ளியாக மாற்றியமைப்பதில் தனி கவனம் ஈர்க்கிறார்.

No comments:

Post a Comment