'தகுதி தேர்வு முடிந்த 7 நாளில் போட்டி தேர்வு'

கோபி:''ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த ஒரு வாரத்தில், வெற்றி பெற்றவர்களுக்கு, போட்டித் தேர்வு நடத்தப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று நடந்த, சமுதாய வளைகாப்பு விழாவில், அவர் பேசியதாவது:முதல் வகுப்பு துவங்கி, ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கிலத்தை படிப்படியாக கற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழோடு சேர்ந்து ஆங்கிலம் கற்றுத்தரவேண்டும் என்ற கடமை, எங்களுக்கு இருக்கிறது.ஆறு முதல் எட்டாம் வகுப்பினருக்கு, 1,000 வார்த்தைகளில், சரளமாக ஆங்கிலம் பேச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது முதல், இன்று வரை, 46 லட்சம் மாணவ - மாணவி யருக்கு, லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.கரும்பலகை முறையை மாற்றி, 90 ஆயிரம் பள்ளிகளுக்கு, ஸ்மார்ட் போர்டு வழங்கப்படும். அரசு பள்ளிகளில், மோசமாக உள்ள பழைய வகுப்பறை கட்டடங்களை அகற்ற, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்துக்குள், போட்டித் தேர்வு நடத்தப்படும். இதற்காக, இயக்குனர் ஒருவரை நியமித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.