மாவட்டத்திற்கு 6 பேருக்கு 'கனவு ஆசிரியர்' விருது தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்

திண்டுக்கல்,'கனவு ஆசிரியர்' விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிக்கும்
பொருட்டு 'கனவு ஆசிரியர்' விருது வழங்கப்படுகிறது. பள்ளியில் கணினியை பயன்படுத்தி பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி செயல்பாடுகளில் சிறந்த, மாணவர் சேர்க்கைக்கு உதவும் ஆசிரியர், பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என மாவட்டத்திற்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து, 'கனவு ஆசிரியர்' விருது மற்றும் ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. மாணவர்களின் கல்வி செயல்பாடுகளை அறிந்து கொள்ளுதல், புதிய விஷயங்களை கற்று கொடுத்தல், தேசிய மாணவர் படை, பசுமை படை, பள்ளி விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றது, பள்ளியின் வளர்ச்சி உதவி, மாணவர் நலனில் அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் 'கனவு ஆசிரியர்'கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள், நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தலைமையாசிரியர் அடங்கிய குழுவினர் இந்த ஆசிரியர்களை தேர்வு செய்கின்றனர். தேர்வான ஆசிரியர்களின் விபரங்களை அக்.20 க்குள் அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.