இரட்டிப்பாகும் பசுமைப்படை பள்ளிகள்: மத்திய அரசு திட்டம்

தேசிய பசுமைப்படை செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த, பள்ளிகளில், தேசிய பசுமைப்படை மற்றும் சூழல் அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ -- மாணவியரை உறுப்பினர்களாக உடைய இந்த அமைப்புகள், சிறப்பாக செயலாற்ற, பள்ளிஅளவில் பொறுப்பாசிரியரும், கல்வி மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்படுகின்றனர்.தற்போதைய நிலையில், மாவட்ட அளவில், 250 பள்ளிகளில், பசுமைப்படை மற்றும் சூழல் அமைப்புகள் உள்ளன.தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:தற்போது, சுற்றுச்சூழல் மற்றும் பசுமை சார்ந்த விஷயங்களில், மத்திய அரசு, கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடும் திட்டம் என, பல விஷயங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை, பசுமைப்படை மற்றும் சூழல் அமைப்புகளில் இணைந்துள்ள மாணவர்களுக்கு உணர்த்தி, அவர்கள் வழியாக, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த,அரசு ஊக்குவிப்புவழங்குகிறது.
தேசிய பசுமைப்படை சார்பில், பள்ளிகள்தோறும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்குவது, மண்ணுக்கேற்ற மரம் வளர்த்து, பள்ளி வளாகங்களில் பசுமை போர்வை உருவாக்குவது, மூலிகை தாவரங்களை வளர்ப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை சார்பில், சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.மாவட்ட வாரியாக, கூடுதலாக, 250 பள்ளிகளில், பசுமைப்படைமற்றும் சூழல் அமைப்புகள் அமைக்க,மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்