பள்ளிகளில் தடுப்பூசி முகாம்

கோவை:அனைத்து பள்ளிகளிலும், தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி முகாம் நடத்த, பொது சுகாதார இயக்குனர், குழந்தைசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தொண்டை அடைப்பான் நோய் பாதிப்புக்குள்ளாகி, பலர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.இந்நிலையில், பொது சுகாதாரத் துறை இயக்குனர், குழந்தைசாமி, கோவை அரசு மருத்துவமனையில், நேற்று ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை கூட்டம் நடத்தினார்.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர்கள் உட்பட, பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், அனைத்து பள்ளிகளிலும், தொண்டை அடைப்பான் நோய்க்கான, தடுப்பூசி முகாம் நடத்த உத்தரவிட்டார்.
கோவை அரசு மருத்துவமனை, 'டீன்' அசோகன் கூறியதாவது:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, நோயாளிகளின் உடல் நலன் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த கூட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும், தொண்டை அடைப்பான் நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும். மலையோர பகுதிகளில், இரண்டு முதல் மூன்று வாரங்கள் தொடர்ச்சியாக, முகாம் நடத்தவும், இயக்குனர் உத்தரவிட்டார்.கோவை அரசு மருத்துவமனைக்கு, எட்டு நர்ஸ்கள், ஐந்து டாக்டர்களை கூடுதலாக நியமிக்கவும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், தடுப்பூசி முகாம் நடத்தவும் அறிவுறுத்தினார்.இவ்வாறு, அவர் கூறினார்.