ஆசிரியை தாக்கியதில் மாணவி படுகாயம்

மதுராந்தகம்:ஆசிரியை தாக்கியதில் காயமடைந்த மாணவி, மதுராந்தகம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த, தென்னம்பட்டு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மகள் லத்திகா, 9; புளியரணங்கோட்டை அரசு ஆரம்பப் பள்ளி, 5ம் வகுப்பு மாணவி.இந்த பள்ளியில் மொத்தம், 19 மாணவர்கள் மட்டுமே உள்ளனர்; ஒரே ஒரு ஆசிரியையான, தேவி என்பவர் பணிபுரிகிறார்.தினமும், பள்ளியை பூட்டி, சமையல் உதவியாளர், பொற்கொடி என்பவரிடம், சாவியை தேவி கொடுப்பார்.அடுத்த நாள் காலை, மாணவர்கள் யாராவது, பொற்கொடியிடம் சாவி பெற்று, பள்ளியை திறப்பர்.இந்நிலையில் நேற்று, மாணவி லத்திகா, சமையல் உதவியாளிடம் சாவி பெற்று, பள்ளிக்கு சென்றார். வழியில், சாவியை தொலைத்து விட்டதாக கூறப்படுகிறது.இதனால், ஆத்திரம்அடைந்த ஆசிரியை தேவி, சாவியை தொலைத்ததற்காக, மாணவியை, பள்ளி வளாகத்தில், குச்சியால் கண்மூடித்தனமாக தாக்கியதாகவும், எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது.வலி தாங்க முடியாத மாணவி, அலறியபடி, ஓடியுள்ளார். இதை பார்த்த அப்பகுதியினர், மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து, மாணவியை மீட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.வெளி காயம் எதுவுமில்லையென்றாலும், மார்பு பகுதியில் வலி இருப்பதாக மாணவி கூறியதால், மருத்துவர்கள் பரிசோதிக்கின்றனர்.