அனைவரின் பிள்ளைகளும் கட்டாயம் அரசுப்பள்ளியில் தான் கற்க வேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றிய கிராம மக்கள்

தமிழகத்தில் ஒற்றை இலக்க மாணவர்களைக் கொண்ட 46 அரசுப்பள்ளிகளைத் தற்காலிகமாக மூடிவிட்டு நூலகங்களாக மாற்றுவதற்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் திட்டமிடப்பட்டு, தற்போது நூலகமாக மாற்றும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அந்தப் பட்டியலில் உள்ளது. ஒரே ஒரு மாணவருடன் செயல்பட்டு வந்த இந்தப் பள்ளி தற்போது, மூடப்பட்டுள்ளது.
 
பள்ளி மூடப்பட்டதால், தலைமையாசிரியர் கனத்த இதயத்துடன் பள்ளியை விட்டுப் பிரிந்து சென்றார். பள்ளி மூடப்பட்டு அங்கு நூலகம் அமைக்கப்பட உள்ளது என்ற தகவல் கிராமம் முழுவதும் பரவவே, ஊர் முக்கியஸ்தர்கள் கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டி இதுபற்றி விவாதித்தனர். முடிவில், தொடக்கப்பள்ளியை நூலகமாக மாற்றக் கூடாது. கிராமத்தினர் அனைவரும் தங்களது பிள்ளைகளைக் கட்டாயம் குளத்தூர் தொடக்கப்பள்ளியில்தான் சேர்க்க வேண்டும்.
 
தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ள பெற்றோர்கள், அங்கிருந்து மாற்றுச் சான்றிதழைப் பெற்று, குளத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானங்களை இயற்றி உள்ளனர். தீர்மானம் இயற்றியதோடு மட்டுமல்லாமல், சிலர் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்களை வாங்கி வந்து குளத்தூர் பள்ளியில் சேர்க்கத் தயாராகிவிட்டனர்.
இதுபற்றி குளத்தூரைச் சேர்ந்த துரைராஜ் கூறுகையில், '1950-ம் ஆண்டு இந்தத் தொடக்கப்பள்ளியை ஆரம்பிச்சாங்க. ரொம்ப பழைமையான பள்ளி. நான் இங்கதான் படிச்சேன். என் பிள்ளைகள் இங்குதான் தொடக்கக் கல்வி படிச்சிட்டு இப்போ, காலேஜ் படிக்கிறாங்க. டாக்டர், இன்ஜினீயர் எல்லாம் உருவாக்கிய பெருமை இந்தப் பள்ளிக்கு உண்டு. வாகனங்களில் கூட்டிக்கிட்டு போறது, ஆங்கிலத்தில் பேச வைப்பது என்று, கடந்த சில வருஷமாகத் தனியார் பள்ளியின் மோகம் அதிகரிச்சு போய், பெற்றோர்கள், பிள்ளைகளை அங்கே சேர்த்துவிட்டுட்டாங்க.
அதோட விளைவுதான் இப்போ, இந்தப் பள்ளியை மூடும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டுருச்சு. திடீர்ன்னு பள்ளியை மூடுவாங்கன்னு நாங்க நெனச்சுக்கூட பார்க்கலை. ரொம்ப வேதனையாக இருந்துச்சு. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்று சொல்வார்கள். பள்ளிக்கூடமும் ஒரு கோயில் தானே. அரசுப்பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்காமல், தனியார் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்து எங்களது கிராமத்தினர் தவறு செய்துவிட்டனர்.
இனி இதுபோன்ற தவறுகள் நடக்கக் கூடாது என்பதற்காகவே, அனைவரின் பிள்ளைகளும் கட்டாயம் தொடக்கக் கல்வி அரசுப்பள்ளியில்தான் கற்க வேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றி உள்ளோம். பள்ளியைத் திறந்தால் போதும், 15 மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பதற்குத் தயாராக உள்ளோம். அரசாங்கம்தான் நல்ல முடிவை எடுக்கணும்" என்றார்.