உலக
பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி முதல் தங்கப் பதக்கம் வென்று சரித்திர சாதனை படைத்தார் சிந்து.
முன்னதாக, உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தொடர்ந்து 3-ஆவது முறையாக தகுதி பெற்றார் இந்திய முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து.
ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனை சீனாவின் சென் யுபெயை 21-7, 21-14 என்ற செட் கணக்கில் 40 நிமிடங்களில் எளிதாக வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார் சிந்து.
இன்று நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஜப்பானின் ஒகுஹராவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடி முன்னணி நிலையில் இருந்தார் சிந்து. தனது உயரத்தை மிகவும் சாதுர்யமாக பயனப்டுத்தி எதிராளியை திணறடித்த சிந்து, முதல் ஆட்டத்தை 21-7 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.
இரண்டாவது ஆட்டத்தின் முதல் புள்ளியை ஒகுஹரா பெற்றபோதும், உடனே சுதாகரித்துக்கொண்ட பி.வி.சிந்து தனது அதிரடியை காட்டினார். இரண்டாவது ஆட்டத்தையும் 21-7 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தார் சிந்து.