பள்ளிகளில் நீர் பாதுகாப்பு நிகழ்ச்சிகள்

கோபிசெட்டிபாளையம் : தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 'ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நீர் பாதுகாப்பு' என்ற தலைப்பில், நிகழ்ச்சிகள் நடத்த, ஒருங்கிணைந்த
பள்ளிக் கல்வியின், மாநில திட்ட இயக்குனர், சுடலைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

மாணவ - மாணவியர்,நாளொன்றுக்கு, குறைந்த பட்சம், 1 லிட்டர் தண்ணீரை சேமிப்பதை ஊக்குவிக்கும் விதமாக, நீர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில், பள்ளிகளில் கூட்டம் நடத்துதல், சுவரொட்டி தயாரித்தல், ஓவியம், கவிதை, கட்டுரை, வினாடி - வினா, நடனம் என, போட்டிகள் நடத்த வேண்டும்.தெருக்கூட்டம், விழிப்புணர்வு விவாதம் மற்றும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும், அன்றாட பள்ளி நிகழ்வுகளுடன், நீர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து, அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மை கல்வி அலுவலருக்கு, மாநில திட்ட இயக்குனர், சுடலைக்கண்ணன் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.