மாணவர்களுக்கானகல்வி, 'டிவி' துவக்கம்: அரசு கேபிளில் 200ம் எண்ணில் பார்க்கலாம்

சென்னை:தமிழக அரசின், கல்வி, 'டிவி' ஒளிபரப்பை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார். கல்வி, 'டிவி'யை, அரசு கேபிளில், 200ம் எண்ணில் பார்க்கலாம்.


தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில், மாணவர்களுக்கு பிரத்யேக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் வகையில், கல்வி, 'டிவி' துவங்கப் பட்டுள்ளது. இதன் ஒளிபரப்பு துவக்க விழா, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், நேற்று நடந்தது.'டிவி' ஒளிபரப்பை துவக்கி, முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது: மாணவர்கள் நலன் கருதி, தமிழக அரசு, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மாணவர்கள், வகுப்பில் மட்டுமின்றி, 'டிவி' நிகழ்ச்சிகள் வழியாகவும் பாடங்களையும், கல்வியாளர்களின் தகவல்கள், உடற்பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.கல்விக்காக தமிழில் துவங்கப்பட்ட, அரசின் முதல் தொலைக்காட்சி என்ற பெருமையை, கல்வி, 'டிவி' பெற்றுள்ளது; 24 மணி நேரமும், கல்வி துறையின் நிகழ்ச்சிகளை பார்க்கலாம். அரசு கேபிளில், 200ம் எண்ணில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான, போட்டி தேர்வு பயிற்சிகளையும், கல்வி, 'டிவி' வழியே பார்க்கலாம்.இந்த பணிகளுக்கு, 1.35 கோடி ரூபாய் ஏற்கனவே செலவு செய்யப்பட்டுள்ளது. கேமரா கருவியும், உயர் தொழில்நுட்ப கருவிகளும் வாங்கப்பட்டுள்ளன. சிறந்த தொழில்நுட்பத்தில், நவீன தகவல் தொடர்பு வளர்ச்சியை பயன்படுத்தி, தமிழக அரசு, இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

உலகில், கல்விக்காக தமிழில் துவங்கப்பட்ட முதல், 'டிவி' என்ற பெருமை, தமிழக அரசின், கல்வி, 'டிவி'க்கு கிடைத்துள்ளது. இதற்காக, பஞ்சாபை சேர்ந்த தனியார் புத்தக நிறுவனமான, 'யுனிக் வேர்ல்ட் ரெக்கார்ட்' சார்பில், முதல்வர், இ.பி.எஸ்.,சிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது.விழாவில், துணை முதல்வர், பன்னீர் செல்வம், சபாநாயகர், தனபால், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.