இடமாறுதல் விதி பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு

சென்னை : ஆசிரியர்களுக்கான இடமாறுதலில், மூன்றாண்டு விதியை எதிர்த்து, வழக்கு தொடர்ந்தவர்களுக்கு, விதியை தளர்த்தி, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு கல்வி ஆண்டின் துவக்கத்திலும், ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டு, விருப்ப இடமாறுதல் வழங்கப்படும். ஒரு கல்வி ஆண்டில், ஒரே இடத்தில் முழுமையாக பணியாற்றியோருக்கு மட்டுமே, இந்த இடமாறுதல் வழங்கப்படும். இந்த ஆண்டு, வரும், 8ம் தேதி முதல் இடமாறுதலுக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடக்க உள்ளது. குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள், ஒரே இடத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் மட்டுமே, இடமாறுதலில் பங்கேற்க முடியும் என, விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. சில ஆசிரியர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும் என்ற விதியை, இடமாறுதல் கவுன்சிலிங்கில் வலியுறுத்தக் கூடாது என, இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, வரும், 8ம் தேதி முதல் நடக்கவுள்ள இடமாறுதல் கவுன்சிலிங்கில், வழக்கு தொடர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு, மூன்றாண்டு விதிகளை கட்டாயப்படுத்த வேண்டாம். அவர்களை, கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்கலாம் என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.