கால்நடை மருத்துவம்: தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை : கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலில், முதல் மூன்று இடங்களை, மாணவியர் பிடித்துள்ளனர்.


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், நான்கு கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன.இதில், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப் படிப்புக்கு, 360 இடங்கள் உள்ளன. இவற்றில், 54 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன.அதேபோல், உணவு, கோழியினம், பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கு, 100 இடங்கள் உள்ளன. இதில், உணவு தொழில் நுட்ப படிப்பில், ஆறு இடங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்திற்கு ஒதுக்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பம், www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில், மே, 8 முதல், 17 வரை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டது.இதில், கால்நடை மருத்துவப் படிப்புக்கு, 15 ஆயிரத்து, 666 பேரும், தொழில்நுட்ப படிப்புகளுக்கு, 2,772 பேர் என, 18 ஆயிரத்து, 438 பேர் விண்ணப்பித்தனர்.இதற்கான தரவரிசை பட்டியலை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், ராதாகிருஷ்ணன், சென்னை, வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவ கல்லுாரியில், நேற்று வெளியிட்டார்.

இதில், கால்நடைமருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு, கலையியல் பிரிவில் விண்ணப்பித்த, 15 ஆயிரத்து, 476 மாணவர்களில், 14 ஆயிரத்து, 526 பேர், தகுதி பெற்றுள்ளனர்.இதே படிப்பிற்கான, தொழிற்கல்வி பிரிவில் விண்ணப்பித்த, 190 மாணவர்களில், 169 பேர் தகுதி பெற்றுள்ளனர்.பி.டெக்., உணவு, கோழியினம், பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு, 2,772 மாணவர்களில், 2,427 பேர் தகுதி பெற்றுள்ளனர்.கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடைபராமரிப்பு பட்டப்படிப்புக்கான தரவரிசையில், தர்மபுரியை சேர்ந்த சுவாதி, முதலிடத்தை பிடித்துள்ளார்.

துாத்துக்குடியை சேர்ந்த ஜேன் சில்வியா, இரண்டாவது இடமும், கன்னியாகுமரியை சேர்ந்த ஹர்சா, மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.பி.டெக்., தொழில்நுட்ப படிப்பில், சிவகங்கையை சேர்ந்த லட்சுமி பிரியதர்ஷனி, முதலிடத்தையும், திருச்சியைசேர்ந்த ஐஸ்வர்யா,இரண்டாவது இடத்தையும், தர்மபுரியை சேர்ந்த சுரேஷ், மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.



தரவரிசை பட்டியல் :
விபரங்களை,www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in ஆகிய,இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். இந்தாண்டு, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய கல்லுாரிகளில், 80 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை, ஜூலை மூன்றாவது வாரத்தில் நடைபெறும். அதற்கான தேதி, ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.ராதாகிருஷ்ணன்கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்