இன்ஜி., கவுன்சிலிங் முதல் சுற்றில் 7,700 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு

சென்னை:-இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின் முதல் சுற்றில், 7,700 பேருக்கு இடங்கள் ஒதுக்கப் பட்டு உள்ளன. இறுதி ஒதுக்கீட்டு ஆணை, நாளை வழங்கப்பட உள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கில், 1.72 லட்சம் இடங்களுக்கு, ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
முதல் சுற்றில், 9,872 மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் விருப்ப பதிவு முடிந்தது. நேற்று, உத்தேச ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.இதில், 7,700 மாணவர்கள், கவுன்சிலிங் கட்டணம் செலுத்தி இடங்களை பெற்றுள்ளனர். அவர்கள், தங்களுக்கான ஒதுக்கீட்டு இடத்தை, இன்று மாலை, 5:00 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்தவர்களுக்கு மட்டும், நாளை இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இரண்டாம் சுற்றில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, கட்டணம் செலுத்தும் வசதி, நாளை மாலை, 5:00 மணிக்கு முடிகிறது.அதேபோல, இரண்டாம் சுற்று மாணவர்களுக்கு, விருப்ப பதிவும், நாளை துவங்க உள்ளது. மூன்றாம் சுற்று மாணவர்களுக்கு, கட்டணம் செலுத்தும் வசதியும், நாளை துவங்க உள்ளது