அரசு துறைகளில் 4 லட்சம் காலிப்பணியிடங்கள்



''தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் நான்கு லட்சம் காலிப்பணியிடங்களால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலவுகிறது,'' என மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் (பொறுப்பு) செல்வம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் விதி எண் 110 ன் கீழ் அறிவித்தார். இதற்காக குழுவையும் அமைத்தார். அந்த குழுவும் பல்வேறு தரப்பினரிடம் விவாதித்து அரசிடம் அறிக்கையளித்தது. அந்த அறிக்கையை பரிசீலித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்வதாக கூறும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
1.1.2016 முதல் 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். அரசு நியமனங்களை தவிர்க்கும் அரசாணை 56 ரத்து செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி 22.1.19 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 6000 அரசு ஊழியர்களுக்கு 17 பி குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதவி உயர்வு, ஓய்வு பெறுவது பாதிக்கப்படுகிறது.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தியதால் பழிவாங்கும் நடவடிக்கையாக மாநில தலைவர் சுப்பிரமணியன் மே 31 ஓய்வு பெற அனுமதிக்கப்படாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதை ரத்து செய்து அவரை பணி ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும்.இதுகுறித்து விவாதிக்க அரசு ஊழியர்கள் சங்க 13 வது மாநில மாநாடு செப்., 27, 28, 29 தஞ்சாவூரில் நடக்கிறது. 27, 28 ல் பிரதிநிதிகள் மாநாடு, 29 ல் பேரணியும், பொது மாநாடும் நடக்கிறது. இதில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர் போராட்டங்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது என்றார்.